கஞ்சா பயிரிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஏலகிரிமலையில் சோதனை நடத்திய போலீசார் எச்சரிக்கை


கஞ்சா பயிரிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஏலகிரிமலையில் சோதனை நடத்திய போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 8:13 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா பயிரிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏலகிரி மலைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சோதனை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா பயிர் சாகுபடி செய்யப்படுகிறதா? என சோதனையிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதனையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கீதா, ஜூலியர் சீசர், மார்டின், ராபர்ட் ஆகியோர் தலைமையில் போலீசார் ஏலகிரி மலைக்கு சென்றனர். அவர்கள் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் கஞ்சா பயிர் செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர். பைனாகுலர் மூலமும் தொலைவில் உள்ள இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்குள் கஞ்சா செடிகள் உள்ளதா? என பார்த்தனர்.

பறக்கும் படையினர் கேமரா மூலம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, வனத்துறையினர், வருவாய்த்துறையினர், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், சாந்தி மற்றும் ஏலகிரிமலை போலீசாரும் உடனிருந்தனர்.

இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா கூறியதாவது :–

போதை பொருளான கஞ்சா பயிர் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இது சட்ட விரோதமாகும். ஏலகிரிமலை பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு ஊடுபயிராக கஞ்சா சாகுபடி செய்கிறார்களா? என சோதனை செய்தோம். அதில் எதுவும் புலப்படவில்லை. மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், சட்ட விரோதமாக கஞ்சா சாகுபடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கஞ்சா மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளோம். இதைத் தொடர்ந்து புதூர்நாடு மலை பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story