மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலை உச்சியில் பிராயசித்த பூஜை பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம்
அண்ணாமலையார் மலையில் பிராயசித்த பூஜை நடந்தது. இதனையொட்டி மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் மாதம் ஒரு விழா நடைபெற்று வருகிறது.
இதில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக கடந்த 23-ந் தேதி மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மகாதீபம் ஏற்றப்படும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று தீபத்தை வணங்குவார்கள். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மகா தீபத்தின்போது மலையேற தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன்படி இந்த ஆண்டும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது அங்குள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். தீபத்திருவிழா முடிந்த சில நாட்களில் இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து புனித நீர் கலசங்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story