திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: தேசிய சுகாதார குழுவினர் திடீர் ஆய்வு


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: தேசிய சுகாதார குழுவினர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:30 AM IST (Updated: 12 Dec 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார குழுவினர் நேற்று திடீரென ஆய்வு நடத்தினர்.

திண்டுக்கல், 

மத்திய அரசின் தேசிய சுகாதார குழு மூலம் ஆண்டுதோறும் மாநிலங்கள் வாரியாக சிறந்த அரசு மருத்துவமனைகளை தேர்வு செய்து ‘காயகல்ப்’ என்ற விருது வழங்கப்படுகிறது. 100-க்கு 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ரூ.3 லட்சமும், 80-க்கு மேல் பெற்றால் ரூ.10 லட்சமும், 90-க்கு மேல் பெற்றால் ரூ.15 லட்சம் மற்றும் விருதும் வழங்கப்படுகிறது. இதையொட்டி, இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்குவதற்காக தேசிய சுகாதார குழு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று தேசிய சுகாதார குழு மாநில திட்ட மதிப்பீட்டாளர் டாக்டர் கென்னடி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சண்முகவேல்ராஜன், ஆய்வக ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினர். 3 பேரும் தனித்தனியாக சென்று குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, இயற்கை மருத்துவ பிரிவு மற்றும் மருந்தகம், பிணவறை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்களை சரிபார்த்ததுடன், நோயாளிகளிடமும் கருத்துகளை கேட்டனர்.

இந்த ஆய்வு குறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷிடம் கேட்டபோது, தமிழகத்தில் கடந்த ஆண்டு 70 மதிப்பெண்கள் பெற்று தலா ரூ.3 லட்சம் விருது பெற்ற 18 அரசு மருத்துவமனைகளில் திண்டுக்கல் மருத்துவமனையும் ஒன்று. இந்த பணத்தை மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக செலவிடுகிறோம்.

இந்த ஆண்டு அதைவிட அதிக மதிப்பெண்களுடன் விருதும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Next Story