ஒகேனக்கல் அருகே, த.மா.கா. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது


ஒகேனக்கல் அருகே, த.மா.கா. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 12 Dec 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் அருகே, த.மா.கா. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த த.மா.கா. பிரமுகர் கணேசன் (வயது 52). கடந்த மாதம் 29-ந்தேதி மர்ம நபர்களால் ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஒகேனக்கல்லைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதையடுத்து கணேசன் கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் பென்னாகரம் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கொலையாளிகள் ரெயிலில் தப்பிச்செல்ல முயல்வதாக ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மொரப்பூருக்கு விரைந்து சென்று கணேசன் கொலை தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் சேலம் நெத்திமேட்டை சேர்ந்த முருகேசன் மகன் ராஜா என்ற ராஜ்குமார் (24), சேட்டு மகன் மூர்த்தி என்ற தட்சிணா மூர்த்தி (23) என்பது தெரியவந்தது. 2 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

2 பேரையும் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story