அத்தையின் இறுதி சடங்கின்போது தேனீக்கள் கொட்டி விவசாயி பரிதாப சாவு 4 பேர் படுகாயம்


அத்தையின் இறுதி சடங்கின்போது தேனீக்கள் கொட்டி விவசாயி பரிதாப சாவு 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே அத்தையின் இறுதி சடங்கின் போது தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி வெங்கட்டம்மா (42). இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த ராஜப்பாவின் அத்தை ராமக்கா (105) என்பவர் நேற்று இயற்கை மரணம் அடைந்தார்.

அவரது இறுதி சடங்கில் ராஜப்பா கலந்து கொள்வதற்காக சென்றார். இதையொட்டி மேள தாளங்கள் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும் ராமக்காவின் உடலை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இறுதி ஊர்வலம் மயானத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்தது.

பின்னர் அந்த தேனீக்கள் பொதுமக்களை துரத்தி, துரத்தி கொட்டியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மூதாட்டியின் உடலை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் ராஜப்பாவை தேனீக்கள் விடாமல் கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து மயானத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் தேனீக்கள் கொட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மயானத்தை சுற்றிலும் தேனீக்கள் பறந்தபடி இருந்தன. தேனீக்களுக்கு பயந்து பொதுமக்கள் யாரும் மயானத்திற்குள் செல்லவில்லை. இதனால் மூதாட்டி ராமக்காவின் உடலும், ராஜப்பாவின் உடலும் மயானத்திலேயே கிடந்தன. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மயானத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் புகை மூட்டி தேனீக்களை விரட்டினர்.

அதன்பின்னர் பொதுமக்கள் மயானத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர். ஆனால் ராஜப்பாவின் உடல் கிடக்கும் இடத்தில் தேனீக்கள் அதிக அளவில் சுற்றி கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அவரது உடலை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இரவு நேரமாகி விட்டதால் ராஜப்பாவின் உடலை இன்று (வியாழக்கிழமை) எடுத்து கொள்ளலாம் என்று பொதுமக்கள் முடிவு செய்து அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் இரவு முழுவதும் ராஜப்பாவின் உடல் மயானத்திலேயே கிடந்தது. அத்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த விவசாயி தேனீக்கள் கொட்டி மயானத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story