கிருஷ்ணகிரி அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு உறவினர்கள் சாலை மறியல்


கிருஷ்ணகிரி அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 12 Dec 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 28). லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் விவசாயி பாபு(38). சதீஸ் வீட்டு சமையல் அறையில் இருந்து வரும் கழிவுநீர், பாபுவின் நிலத்தின் வழியாக செல்வதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சதீஸ் தரப்புக்கும், பாபு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாபு மற்றும் சிலர், சதீஷை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விசாரணை நடத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்ட பாபு மற்றும் சிலரை கைது செய்ய கோரி, கிருஷ்ணகிரி அணை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீசின் உறவினர்கள் அணை போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

பின்னர், நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதனால் சதீசின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story