திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம்


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மூலவர் சன்னதி விமான கலசங்களில் காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீர் ஊற்றினார்.

திருச்சி,

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 9-ந்தேதி 48 பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதி விமானங்களுக்கு முதல் கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் பிரசன்ன விநாயகர் சன்னதி விமானங்களுக்கும், ராஜகோபுரம் உள்பட 9 கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஐந்தாம் கால யாக சாலை பூஜையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. பூர்ணாஹுதி, தீபாராதனையை தொடர்ந்து காலை 6 மணி அளவில் மேள தாளம் மற்றும் பஞ்ச வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து அர்ச்சகர்கள் கடங்களை (புனித நீர் அடங்கிய குடங்கள்) தலையில் சுமந்தபடி கோபுரங்களில் ஏறினார்கள். கோபுர கலசங்களுக்கு மாலை சூடி, வேத மந்திரங்களை ஓதினார்கள். காலை 6.30 மணிக்கு வாணவெடி போடப்பட்டது. வாணவெடி சத்தம் கேட்டதும் ஒரே நேரத்தில் ராஜகோபுரம் உள்பட 9 கோபுர கலசங்களிலும் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றினார்கள். பின்னர் தீபாராதனை காட்டினார்கள். அப்போது கோவில் வளாகத்திலும் பிரகார வீதிகளிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என கூறி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மூலவர் ஜம்புகேஸ்வரர் சன்னதி விமானத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருடன் அர்ச்சகர்கள் கடங்களை சுமந்து வந்தனர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின.

சிவனடியார்கள் சங்கு ஊதி ஒலி எழுப்பினார்கள். அப்போது தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித், தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வந்தனர்.

இதனை தொடர்ந்து காலை 6.40 மணிக்கு சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜம்புகேஸ்வரர் சன்னதி விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினார். பின்னர் தீபாராதனை செய்து பக்தர்களை நோக்கி காட்டினார்.

அவரது அருகில் நின்று கொண்டிருந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது மாவிலைகளால் புனித நீரை தெளித்தார்.

பின்னர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தார்.

அதன் பின்னர் சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு வந்தார். சன்னதி விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் அப்போது அருகில் நின்று கொண்டிருந்தார். தீபாராதனை காட்டியபோது கவர்னர் உள்பட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். கோவிலின் மேல் பகுதியிலும், பிரகார வீதிகளிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் நின்று கொண்டிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கும்பாபிஷேக விழாவில் தமிழக அரசின் அறநிலைய துறை ஆணையர் ராமச்சந்திரன், திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் கட்டளை சுவாமி நாத தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள், பரத்வாஜ் சுவாமிகள், திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமாரதுரை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள், உபயதாரர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கோவில் வளாகம் மற்றும் பிரகாரங்களில் திரண்டிருந்த பக்தர்கள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகளை நோக்கி சாமி கும்பிடுவதற்காக செல்ல தொடங்கினர். பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் இந்த இரண்டு சன்னதி களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. கோவிலின் வெளி பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

Next Story