பாரூர் பெரிய ஏரியில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு


பாரூர் பெரிய ஏரியில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 6:55 PM GMT)

பாரூர் பெரிய ஏரியில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் பாசனத்திற்காக நேற்று முதல் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை 120 நாட்களுக்கு 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம்நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் நடராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:- தமிழக முதல் - அமைச்சர் உத்தரவுப்படி பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 2 ஆயிரத்து 397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் நேற்று முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதன்படி பாரூர் பெரிய ஏரியில் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நீர் வரத்தை கொண்டும் மேலும் பருவ மழையை எதிர்நோக்கியும் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கன அடி வீதமும் ஆக மொத்தம் வினாடிக்கு 70 கன அடி வீதம் முதல் 5 நாட்களுக்கு நாற்றுவிட தொடர்ந்து தண்ணீர் விட்டு பிறகு முறைப்பாசனம் வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் ஆயிரத்து 583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாயின் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறுது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப் பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படமாட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், முகமது பையாஸ்அகமது, உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் பிரபாகரன், முன்னாள் பாசன சங்க தலைவர்கள் தருமன், தீரன், கண்ணப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story