பந்தலூர் அருகே: காட்டு யானைகள் முகாம் - ஆதிவாசி மக்கள் பீதி
பந்தலூர் அருகே காட்டுயானைகள் முகாமிட்டன. இதனால் ஆதிவாசி மக்கள் பீதியடைந்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதியில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதேபோல் சேரம்பாடியில் நேற்று காலை மற்றொரு காட்டு யானை புகுந்தது. இதை கண்ட தோட்ட தொழிலாளர்கள், பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர் லூயீஸ் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டு யானையை பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னரே தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் பந்தலூர் அருகே 10-ம் நெம்பர் ஆதிவாசி காலனிக்குள் 3 காட்டு யானைகள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன், வன காப்பாளர் லூயீஸ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இது குறித்து பொதுமக்கள், ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வருகின்றன. இதனால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் வருகின்றன. இதனால் வனத்தில் பசுந்தீவனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்தின் கரையோரம் அகழி வெட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story