என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 4 பேர் சாட்சியம் 20-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ரெயில்வே ஊழியர்கள் உள்பட 4 பேர் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி, வக்கீல் பார்த்தீபன் உள்பட 41 பேர் சாட்சியம் அளித்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் கார் டிரைவர் அருண் உள்பட 14 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து பள்ளிபாளையம் அருகே ரெயில் பாதையில் கிடந்த கோகுல்ராஜ் உடலை முதலில் பார்த்த ரெயில்வே கேங்மேன் ராஜன் (58), ரயில்வே கேட் கீப்பர் சுசீஷ் என்கிற அஜிஸ்கோட்டாச்சாரி (35) மற்றும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் அப்போதைய நாமக்கல் மாவட்ட செயலாளர் அருண், கரூர் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகிய 4 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story