திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு நகரின் மையப்பகுதியில் உள்ள 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்ன ஓங்காளியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 9-ந் தேதி காலை விநாயகர் வழிபாடுகளுடன் யாகவேள்வி, சிறப்பு பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து கங்கை, யமுனை, கோதாவரி நதிகளில் இருந்தும், ராமேசுவரம் கோவில்களில் இருந்தும் புனிததீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு யானை, குதிரைகள் மேல் வைத்து திருச்செங்கோடு நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் 10, 11-ந் தேதிகளில் முதற்கட்ட, 2-ம் கட்ட, 3-ம் கட்ட யாகவேள்வி பூஜைகள் வேத ஆகம முறைப்படி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கட்ட யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மகாபூர்ணாகுதி, யாகசமர்ப்பணம் செய்து தீபஆராதனை செய்யப்பட்டு, புனிதநீர் குடங்கள் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து காலை 6 மணியளவில் சின்ன ஓங்காளியம்மன் கோவில் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகர், அம்பாள், மூலவர், உற்சவர் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்வித்து, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. அப்போது திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரண்டு இருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க சாமி கும்பிட்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நாள் முழுவதும் நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் சின்ன ஓங்காளியம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) முதல் 48 நாள் மண்டல பூஜைகள் தொடங்கி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்து குமார் மற்றும் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story