மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 140 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 140 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 13 Dec 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 140 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மையின இளைஞர்களின் திறன் அறிவை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டு சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள டாம்கோ மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகின்றது. மேலும் தனிநபர் கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன், கல்விக்கடன் உள்ளிட்ட கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2015-16-ம் நிதியாண்டில் 20 விலையில்லா தையல் எந்திரங்களும், 2016-17-ம் நிதியாண்டில் 60 விலையில்லா தையல் எந்திரங்களும், 2017-18-ம் நிதியாண்டில் 60 விலையில்லா தையல் எந்திரங்களும் என கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 400 மதிப்பிலான 140 விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 140 குடும்பங்கள் பயன்பெற்று அவர்களின் வாழ்க்கைத்தரமும், பொருளாதாரமும் மேம்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story