பாலியல் கொடுமைக்கு எதிராக 2-ம் வகுப்பு மாணவி விழிப்புணர்வு ஓட்டம் 10 கி.மீ.தூரத்தை 89 நிமிடத்தில் கடந்து சாதனை
பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரக்கோணத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவி 10 கிலோ மீட்டர் தூரத்தை 89 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கைனூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு வனிஷ்கா (வயது 7), பிரணிதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வனிஷ்கா அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறி உள்ளார். இவருக்கு ஓட்டத்தில் நல்ல திறமை இருந்ததால் அதை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
அதன்பேரில் ஓட்டத்தின் மூலம் உலக சாதனை படைத்து பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை தனியார் பள்ளி நிர்வாகம் செய்தது.
நேற்று அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் நேதாஜி நகர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து எஸ்.ஆர்.கண்டிகை கிராமம் வரை விழிப்புணர்வு ஓட்டத்தை காலை 7.02 மணிக்கு தொடங்கினார். தொடர் ஓட்டத்தை அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை ‘ஜெட்லி புக்காப் ரெக்கார்டு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோகுல்ராஜ் மற்றும் ஜெட்லி ஆகியோர் கண்காணித்தனர். விழிப்புணர்வு ஓட்டத்தை அவர் எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் காலை 8.31 மணியளவில் நிறைவு செய்தார். 89 நிமிடங்களில் 10 கிலோ மீட்டர் தூரத்தை மாணவி வனிஷ்கா கடந்து சாதனை படைத்தார். இது ‘ஜெட்லி புக்காப் ரெக்கார்டு’ அமைப்புக்கு உலக சாதனையாகும். அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த வனிஷ்காவை பயிற்சியாளர் சுகன், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story