சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு: சாப்ட்வேர் மாற்றத்தால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை தவிர்ப்பு


சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு: சாப்ட்வேர் மாற்றத்தால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை தவிர்ப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் நிலையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக இருக்கும் பத்திரங்களை பதிவு செய்ய முன்பெல்லாம் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் இதற்கு இடைத்தரகர்களையும் நாடிச்செல்ல வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இந்த நிலையை போக்க ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் தமிழக அரசின் சார்பில் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் பத்திரங்களை பதிவு செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் குறிப்பிட்ட தேதியில் மட்டும் பத்திரப்பதிவுக்கு சென்றால் போதும்.

இந்த நிலையில் இந்த புதிய முறைப்படி பதிவுக்கு வரும் பொதுமக்களின் பத்திரங்கள் பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், பத்திரப்பதிவு அலுவலங்களில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனால் ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவில் வரிசை முறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. பத்திரங்களை பதிவுக்கு ஏற்பதிலும், பதிவு முடிந்த நிலையில் பத்திரங்களை திருப்பி தரும் நடைமுறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இருப்பினும் பத்திரங்களை வரிசை எண் அடிப்படையில் பதிவுக்கு ஏற்கும்போதும், வில்லங்க சான்றுக்கான அட்டவணை தயாரித்தல் மற்றும் ஸ்கேன் செய்வதிலும் குளறுபடி ஏற்பட்டது.

இதையடுத்து பதிவுக்கு ஏற்கப்படும் பத்திரங்களை வரிசை முறைப்படி ஸ்கேன் செய்யவும், மாற்றி ஸ்கேன் செய்தால் பதிவுக்கு ஏற்காத வகையிலும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த வரிசை எண் அடிப்படையில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு தான் அடுத்து வரும் நபர்களுக்கு பத்திரம் பதிவு செய்ய முடியும் என மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த புதிய முறைப்படி பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் விண்ணப்பித்தால், அவர்களை பத்திர பதிவுக்கு 2 நாட்களில் அழைக்க வேண்டும். பதிவுக்கு வந்த பொதுமக்களை காக்க வைக்கக் கூடாது என்பதால் உடனுக்குடன் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால் முன்புபோல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இப்போது கிடையாது.

ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால், அந்த நிலத்திற்கு அரசின் வழிகாட்டி மதிப்பு தெரிய வேண்டும். இதற்காக நிலத்தின் சர்வே எண், ஊர் பெயர், தெரு போன்ற விவரங்களை அளித்தால் அந்த நிலத்தின் மதிப்பை தெரிந்து கொள்ளலாம். இதற்காக முன்பு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும் அல்லது இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டும் என்ற நிலை இருந்தது.

இப்போது ஆன்லைன் மூலமே அரசின் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் பத்திரம் பதிவு செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், 8 சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 25 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன.

Next Story