ஆசிரியர் பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படுகிறது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


ஆசிரியர் பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படுகிறது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2018 11:30 PM GMT (Updated: 12 Dec 2018 9:33 PM GMT)

ஆசிரியர் பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படுகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் 202 பள்ளிக்கூடங்களில் ரூ.1,142 கோடியே 94 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் செங்கோடம்பாளையம், குருவரெட்டியூர், சென்னிமலை ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் மொத்தம் ரூ.5 கோடியே 22 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்தம் 970 மாணவ–மாணவிகள் பயன்பெறுகிறார்கள். மேலும், தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 62 உதவியாளர்களுக்கு புதிதாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிக்கூடங்களில் தேவைக்கு ஏற்ப புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இதற்காக நபார்டு வங்கியின் மூலம் நிதிகள் பெற்று பணிகள் நடக்கும். கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டங்களுக்கான புத்தகங்களை வழங்க ஓரிரு நாட்கள் மட்டும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஆண்டு 3–ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் வரும் முதல் வாரத்தில் வழங்கப்படும். அதற்கான பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக அந்தந்த பகுதி எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிய 82 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட காலியிடங்களும், வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களும் உள்ளன. அதை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விடுபட்ட பிளஸ்–2 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் வருகிற ஜனவரி மாதம் 10–ந் தேதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.11 கோடியே 17 லட்சம் ஒப்பந்தம் விடப்பட உள்ளது. ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் ஆசிரியர் அல்ல. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு அரசு உரிய பதில் தெரிவித்து உள்ளது. இந்த அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆசிரியர் கூட்டமைப்புகள் பாராட்டி உள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நேர்மையான முறையில் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 100–க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டனர். இந்த ஆண்டு 11 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம், மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ.வுடன் இணைக்கப்பட்டதால் மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்கும் நிதி குறைக்கப்படவில்லை. தேவையான நிதியை தமிழக அரசு சார்பில் கேட்டு உள்ளோம். மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் 15 குழந்தைகளுக்கு கீழ் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நிதியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளது. ஆனால் மாநில அரசுக்கு எந்த பள்ளிக்கூடங்களையும் மூடும் எண்ணம் இல்லை.

எனவே வருகிற ஜனவரி மாதம் 21–ந் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவ–மாணவிகள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம் 51 ஆயிரத்து 216 மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட உள்ளதால் ஒரு வகுப்பறைக்கு 30 மாணவர்களுக்கு மேல் படிக்கும் நிலை ஏற்படும். இதனால் மத்திய அரசு நிதி வழங்குவதில் பாதிப்பு இருக்காது. மத்திய அரசு ஏற்கனவே பாக்கி வைத்துள்ள ரூ.1,100 கோடியில் இதுவரை ரூ.475 கோடியை வழங்கி உள்ளது. மீதமுள்ள நிதி விரைவில் கிடைக்கும்.

அரசாணையை எரித்த போராட்டத்தில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது ஏற்புடையதல்ல. அரசாணை, அரசியல் அமைப்பு சட்டம் போன்றவற்றை எரித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருநபர் குழு என்பது அனைத்து அரசுத்துறை ஊழியர்களின் குறைகளை கேட்பதற்காக அமைக்கப்பட்டது. அதில் பள்ளிக்கல்வித்துறையும் அடங்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story