திண்டிவனம் அருகே விபத்து: டேங்கர் லாரி-ஆம்னி பஸ் மோதல்; அய்யப்ப பக்தர் பலி - 5 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே டேங்கர் லாரி, ஆம்னி பஸ் மோதியது. இதில் அய்யப்ப பக்தர் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம்,
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதை சென்னை முருகப்பா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முருகன்(வயது 45) என்பவர் ஓட்டினார். இதேபோல் தென்காசியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இதை திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா சின்னகவுண்டர்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் அழகர்சாமி(35) என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று காலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக திடீரென டேங்கர் லாரியின் பின்பகுதியில் மோதியது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரியும், ஆம்னி பஸ்சும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தளவாய்புரத்தை சேர்ந்த ராமசாமி மகன் மாரிமுத்து(43) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூலி தொழிலாளியான இவர் சபரிமலை அய்யப்ப சாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
மேலும் அவரது தாய் லட்சுமி(65), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பெத்தநாடார்பட்டி மாரியப்பன் மகன் அன்பரசன்(33) உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story