26 கிராமங்கள் பயனடையும்; கட்டிவயல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்


26 கிராமங்கள் பயனடையும்; கட்டிவயல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் 26 கிராமங்கள் பயனடையும் கட்டிவயல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆண்டாவூருணி, கட்டிவயல், என்.எம்.மங்கலம், பாகனூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்த ஊராட்சி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக குடிநீர் திட்டம் அமைத்து அதன் மூலம் இந்த பகுதியில் உள்ள கிராமங்கள் பயன்அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மகளிர் அமைப்புகள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 4 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 26 கிராமங்கள் பயன்அடையும் வகையில் கட்டிவயல் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.16 லட்சம் மதிப்பில் ஆண்டாவூருணியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதிதாக ராட்சத ஆழ்குழாய் அமைக்கப்பட்டுஉள்ளது.

ஆனால் இங்கு இதுவரை மின் மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் இங்கு ஆழ்குழாய் அமைக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் உள்ளது. தற்போது பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம்ஆண்டாவூருணியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் செயல்பட மின் இணைப்பு உடனடியாக வழங்குவதுடன் கட்டிவயல் கூட்டுகுடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.

Next Story