போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற வங்காளதேச கொள்ளையர்கள் 2 பேர் சுட்டுப்பிடிப்பு - பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்


போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற வங்காளதேச கொள்ளையர்கள் 2 பேர் சுட்டுப்பிடிப்பு - பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 13 Dec 2018 3:46 AM IST (Updated: 13 Dec 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற வங்காளதேச நாட்டை சேர்ந்த 2 கொள்ளையர்களை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

டெல்லியில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 கொள்ளையர்கள், பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்கள் ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்தில் இருந்து வேறு இடத்திற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத்துக்கு டெல்லி போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தொட்டமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத் உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீசார் ெகாள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் இம்மடிஹள்ளி வழியாக ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்திற்கு கொள்ளையர்கள் வருவது பற்றி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இம்மடிஹள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர்.

பின்னர் சிறிது தூரத்தில் வைத்து 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே அவர்களை பிடிக்க போலீஸ்காரர்கள் மஞ்சுநாத் மற்றும் சந்திரப்பா ஆகியோர் முயன்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர்களை தாக்கினார்கள். இதில், மஞ்சுநாத், சந்திரப்பா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 பேரையும் நோக்கி சுட்டார். இதில், 2 பேரின் கால்களிலும் குண்டுகள் துளைத்தது. இதனால் அவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.

பின்னர் 2 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தார்கள். அதன்பிறகு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோல, காயம் அடைந்த போலீஸ்காரர்கள் மஞ்சுநாத், சந்திரப்பாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத் விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த கொள்ளையர்கள் வங்காளதேச நாட்டை சேர்ந்த முனீர்(வயது 38), மிலன்(27) என்று தெரியவந்தது. அவர்கள் மீது டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது அந்த மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும், மேலும் போலீசாரிடம் சிக்காமல் 2 பேரும் பெங்களூருவில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

கைதான 2 பேர் மீதும் கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story