எம்.ஜி. ரோடு-டிரினிட்டி சர்க்கிள் நிலையங்களுக்கு இடையே பெங்களூரு மெட்ரோ ரெயில் உயர்மட்ட பாதையில் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம்-பயணிகள் தவிப்பு


எம்.ஜி. ரோடு-டிரினிட்டி சர்க்கிள் நிலையங்களுக்கு இடையே பெங்களூரு மெட்ரோ ரெயில் உயர்மட்ட பாதையில் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம்-பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 4:04 AM IST (Updated: 13 Dec 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு எம்.ஜி. ரோடு-டிரினிட்டி சர்க்கிள் ரெயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் உயர்மட்ட பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

பெங்களூரு,

பெங்களூருவில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு மற்றும் நாகவாரா-எலச்சனஹள்ளி இடையே இந்த மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் தினமும் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூரு எம்.ஜி.ரோடு-டிரினிட்டி சர்க்கிள் ரெயில் நிலையங்களுக்கு இடையே ெமட்ரோ ரெயில் உயர்மட்ட பாதையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதாவது 155-வது தூண் மீது வைக்கப்பட்டுள்ள இணைப்பு கான்கிரீட் சிலாப்புகள் இடையே இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த இணைப்பு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக இடைவெளி காணப்படுகிறது.

இதை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஆய்வு பணியின்போது கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை அந்த பாதையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அந்த விரிசலை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். பின்னர், அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் தற்காலிகமாக முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு அவ்வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

விரிசல் ஏற்பட்டு உள்ள டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் ரெயில்கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் கழக நிறுவன இயக்குனர் அஜய்சேட் கூறியதாவது:-

“மெட்ரோ ரெயில் தண்டவாளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது. சிலாப்புகள் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இது ஒரு சிறிய பிரச்சினை தான். தூண் சரிந்துவிழும் நிலை எதுவும் இல்லை.

அதனால் அச்சப்பட தேவை இல்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட்டு சிலாப்புகளில் இதுபோன்ற விரிசல் ஏற்படுவது இயல்பானது தான். மெட்ரோ ரெயில் பாதையில் 2 இடங்களில் இத்தகைய பிரச்சினை இருக்கிறது.

இதை சரிசெய்ய எங்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு தனியார் அமைப்பு, பெங்களூரு இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளோம்.

அவர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர். இந்த விரிசலை சரிசெய்யும் பணி விரைவாக முடிக்கப்படும். இந்த பணி எப்போது முடிக்கப்படும் என்று காலக்கெடு எதையும் கூற இயலாது.

இந்த பாதையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் முடிந்தவரை ரெயில்களை இயக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அஜய்சேட் கூறினார்.

வழக்கமாக அதிகாலை 5 மணியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் விரிசல் காரணமாக நேற்று காலை சிறிது நேரம் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகினர்.

மெட்ரோ ரெயில்களின் வருகை-புறப்பாடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்த ஊழியர்களுக்கும் இதுபற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் குழப்பம் அதிகரித்தது.

இந்த நிலையில் பயணிகள் டிக்கெட்டை திரும்ப கொடுத்துவிட்டு கட்டணத்தை வாபஸ் பெற்று திரும்பி சென்றனர். அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் சென்றனர். பொதுவாக அந்த பாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. இந்த பிரச்சினை வந்த பிறகு, 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மெட்ரோ ரெயில் பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதி சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விரிசல் சரிசெய்யப்படும்வரை, ரெயில் போக்குவரத்து சேைவயை நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெட்ரோ ரெயில் பாதையில் ஏற்பட்டுள்ள விரிசலை செய்யும் பணிகள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரிசல் ஏற்பட்டுள்ள பகுதி மிகச்சிறியது. அந்த சிலாப்பு பகுதியின் உறுதித்தன்மை குறித்து சில சோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும், அந்த பாதையின் அடியில் செல்லும் சாலையை பயன்படுத்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். டிரினிட்டி சர்க்கிள் பகுதியை சேர்ந்த வினய் கூறுகையில், “இந்த மெட்ரோ ரெயில் பாதை உறுதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தேவை இல்லை என்று கூறினர். ஆனால் இப்போது அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது” என்றார்.



Next Story