இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில்: தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - ஆண்டிப்பட்டியில், வைகோ பேட்டி


இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில்: தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - ஆண்டிப்பட்டியில், வைகோ பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும், தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று ஆண்டிப்பட்டியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ம.தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு நேற்று வருகை தந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை பா.ஜனதா இழந்துள்ளது. தெலுங்கானாவிலும், மிசோரத்திலும் மாநில கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

எனவே தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் தி.மு.க கூட்டணி 18 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். அந்த நிலை ஏற்படும்போது தமிழகத்தில் பொதுத்தேர்தல் வராமலேயே தி.மு.க ஆட்சிக்கு வரும். மத்தியில் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். அது ஜனநாயகத்தை காக்கும். மதச்சார்பின்மையை காக்கும். அடுத்த ஆண்டில் இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் திருப்பங்கள் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமண மேடையில் வைகோ பேசும்போது, ‘முல்லைப்பெரியாறு, நியூட்ரினோ ஆய்வு திட்ட போராட்டங்களுக்காக தேனி மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இதேபோல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் 22 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன். நான் போராடிய காரணத்தால் தான் இன்றுவரை மோடி அரசால் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தினை கொண்டு வரமுடியவில்லை. நரேந்திரமோடி இனி கனவிலும் கூட பிரதமராக வரமுடியாது’ என்றார்.

திருமண விழாவில் தாலி கட்டும் நிகழ்வின்போது மேடை முன்பாக இருந்தவர்கள் அரிசியை அட்சதையாக தூவி வாழ்த்தினர். அப்போது மணமக்களுக்கு பின்னால் திருமண மேடையில் நின்றிருந்த சில வாலிபர்கள் ஜிகினா மற்றும் நுரை தூவும் ஸ்பிரேவை அடித்தனர். இதைக்கண்ட வைகோ ஆத்திரமடைந்து ஒரு வாலிபரிடமிருந்து ஸ்பிரே டின்னை பிடுங்கி, அவரை அதை வைத்து ஓங்கி அடித்தார். இதனால் அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் ம.தி.மு.க நிர்வாகிகள் வந்து வைகோவை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் வைகோ மணமக்களுக்கு மாலை எடுத்து கொடுத்து திருமண விழாவை நடத்தினார். இந்த சம்பவம் திருமண விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story