அரசு பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி ; வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு


அரசு பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி ; வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 13 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த வேங்கூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிப்பு முடிந்து, மேற்படிப்புக்காக மாற்று சான்றிதழ்களை பெற செல்லும் மாணவ, மாணவிகளிடம் இங்குள்ள தலைமை ஆசிரியை லஞ்சம் கேட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இந்த சூழ்நிலையில் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றிய 2 பேர், தாங்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை தருமாறு தலைமை ஆசிரியையிடம் கேட்டனர். அப்போதும் அவர் அந்த ஆசிரியர்களிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியை தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது பற்றி அறிந்த பள்ளி மாணவர்கள் நேற்று திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியையை கண்டித்தும், அவரை பணியிடமாற்றம் செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, திருக்கோவிலூர், உதவி தொடக்க கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன், திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். பின்னர் இதுபற்றி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story