மக்களிடம் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் முறையாக செலவிடப்படுகிறதா? சாலை வரி மூலம் மரங்கள் நடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு


மக்களிடம் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் முறையாக செலவிடப்படுகிறதா? சாலை வரி மூலம் மரங்கள் நடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 12 Dec 2018 11:15 PM GMT (Updated: 12 Dec 2018 10:42 PM GMT)

சாலை வரியாக வசூலிக்கப்படும் தொகை முறையாக செலவிடப்படுகிறதா என்பது தெரியவில்லை என்றும், அந்த தொகை மூலம் 4 வழிச்சாலைகளில் மரங்களை நடக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

4 வழிச்சாலைக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. குமரி–வாரணாசி இடையிலான தேசிய நெடுஞ்சாலை(எண்–7) 2 ஆயிரத்து 369 கிலோமீட்டர் நீளம் உடையது. இதை 4 வழிச்சாலையாக மாற்ற, 1 லட்சத்து 78 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு பதிலாக 4 வழிச்சாலையில் மரங்கள் நடப்படவில்லை. இதேபோல ஏராளமான 4 வழிச்சாலைகளிலும் மரங்கள் நடப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 4 வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட ஒரு மரத்துக்கு பதில் 10 மரங்கள் நட உத்தரவிட்டது. சாலைகளின் இருபுறமும் மரங்களை அசோக மன்னர் நட்டு வைத்தார் என்று பள்ளிப்பாடத்தில் என்னை போன்ற பலருக்கும் கற்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நடைமுறையை அரசு கடைபிடிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல், புதிதாக வாகனம் வாங்குபவர்களிடம் சாலையை பராமரிக்க சாலை வரியும், பசுமையை பாதுகாக்க பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பெட்ரோல், டீசல் வாங்கும்போது ஒரு லிட்டருக்கான தொகையில் 6 ரூபாயை மத்திய சாலை நிதிக்காக நம்மிடம் பெறுகிறார்கள். விவசாயத்துக்காகவோ, வீட்டு உபயோகத்துக்காகவோ, வாகனம் ஓட்டுவதற்காகவோ என எதற்காக பெட்ரோல், டீசல் வாங்கினாலும் மத்திய சாலை நிதியை நம்மிடம் அரசு வசூலிக்கிறது. இந்த நிதி மூலமாக தேசிய, மாநில, ஊரக சாலைகள் போடப்படுவதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த வகையில் கடந்த 2016–ம் ஆண்டு 69 ஆயிரத்து 800 கோடி ரூபாயும், 2017–ம் ஆண்டு 80 ஆயிரத்து 800 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 1 லட்சத்து 13 ஆயிரம் கோடியை மத்திய சாலை நிதிக்காக வசூலிக்க இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சாலையை பராமரிக்கவும், மரங்களை வளர்க்கவும் பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. மரங்கள் கார்பன்–டை–ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இதனால் தான் நாம் உயிர் வாழ முடிகிறது. எனவே மரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து 4 வழிச்சாலையில் அதிக அளவில் மரங்கள் நட்டு வைத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர், தமிழக முதன்மை வன பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 4–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story