திருமங்கலம் அருகே குடிசை வீட்டை அபகரித்ததாக உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்


திருமங்கலம் அருகே குடிசை வீட்டை அபகரித்ததாக உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 10:42 PM GMT)

திருமங்கலம் அருகே குடிசை வீட்டை அபகரித்ததாக உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் ராஜேசுவரி(வயது 46). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். சிவன்நகரில் ராஜேசுவரி குடிசை அமைத்து வசித்து வந்தார். ஆனால் அவர் குடிசை அமைத்திருந்த இடம், அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டா இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர், குடிசை வீட்டில் இருந்து ராஜேசுவரியை வெளியேற்றியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தனது குடிசை வீட்டை அபகரித்ததாக ராஜேசுவரி ஆஸ்டின்பட்டி போலீசார், திருமங்கலம் தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு கொடுத்தார். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராஜேசுவரி நேற்று அப்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார், ராஜேசுவரியிடம் இறங்கி வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து திருமங்கலம் தீயணைப்பு படையினர் வந்து அவர்கள் ராஜேசுவரி கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு இடத்தில் பட்டா போட்டு தருவதாக உறுதியளித்த பின்பு அவர் கீழே இறங்கி வந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் கூறும்போது, ராஜேஸ்வரி குடிசை அமைத்திருந்த இடம் ராமச்சந்திரனின் பட்டா இடம். இதனால் அவருக்கு உச்சப்பட்டி துணைக்கோள் நகரத்தில் வீடு ஒதுக்க கோரி உள்ளோம் என்றார்.


Next Story