தோல்வி பயத்தால் ‘18 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் போட்டியிட விடமாட்டார்கள்” அ.தி.மு.க. மீது தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு


தோல்வி பயத்தால் ‘18 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் போட்டியிட விடமாட்டார்கள்” அ.தி.மு.க. மீது தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Dec 2018 5:15 AM IST (Updated: 13 Dec 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

“தோல்வி பயத்தால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் இடைத்தேர்தலில் போட்டியிட விடமாட்டார்கள்“ என்று அ.தி.மு.க. மீது தங்கதமிழ் செல்வன் குற்றம்சாட்டினார்.

மதுரை,

சிவகங்கையில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவகங்கை அ.ம.மு.க மாவட்ட செயலாளர் உமாதேவன் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் நேற்று சிறையில் சந்தித்தார். பின்னர் அவர் வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேரப்போவதாக உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. ஆனால் அவர் இதுநாள் வரை அதை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேருவது குறித்த தகவல் உண்மையல்ல. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் இருக்கிறது. இது குறித்து துணை பொதுச்செயலாளரிடம் அனைவரும் பேசி உள்ளோம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எங்களின் வேட்புமனுவை நிராகரிப்பு செய்யும் நிலை உள்ளது. அப்படியே தேர்தல் நடந்தால், தோல்வி பயத்தில் அந்த தேர்தலை நிறுத்தும் நிலையில் இந்த அரசாங்கம் இருக்கிறது. தேர்தலை நடத்தும் அதிகாரியை வைத்து எங்கள் மனுவை தள்ளுபடி செய்துவிடுவார்கள். பின்னர் நாங்கள் அனைவரும் கோர்ட்டுக்குதான் செல்ல வேண்டும். அதன் பின்பு நாங்கள் போட்டியிட முடியாது. அந்த தொகுதியில் நாங்கள் 18 பேர் போட்டியிட்டால் தான் ஜெயிக்க முடியும்.

ஏன் என்றால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். அங்கு புதுமுகங்களை போட்டியிட வைத்து ஜெயிக்க முடியாது. எனவே இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாத சூழ்நிலையை அ.தி.மு.க. அரசாங்கம் உருவாக்கி உள்ளது. இதற்கு எல்லாம் தீர்வு காண வேண்டும் என்று துணை பொதுச்செயலாளரிடம் கூறி உள்ளோம். நாங்கள் விரைவில் பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து பேச உள்ளோம். அப்போது இங்குள்ள அரசியல் சூழ்நிலை, இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவோம்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது பாராட்டக்கூடியது. அந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சி ஆட்சி செய்தது. அதே போன்று காங்கிரஸ் ஆட்சி செய்த மிசோரம் மாநிலத்தில் தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் மூலம் காங்கிரசுக்கு ஆதரவாக 5 மாநில தேர்தல் முடிவுகள் இல்லை. இது அந்தந்த மாநில மக்களின் வெளிப்பாடுதான். எனவே வருங்காலத்தில் நாங்கள் நல்ல கூட்டணி அமைப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story