வாலிபரின் உடலை எலிகள் கடித்த சம்பவம்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு


வாலிபரின் உடலை எலிகள் கடித்த சம்பவம்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் உடலை எலிகள் கடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.

சிதம்பரம், 

சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). இவர் தனது காதலி இறந்த வேதனையில் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. அப்போது வைத்தீஸ்வரனின் உடலை எலிகள் கடித்து குதறியது. இதை பார்த்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் கலா நேற்று காலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பிணவறைக்கு சென்று அங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களை அகற்றவும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி எலிகள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் வைத்தீஸ்வரன் உடலை எலிகள் கடித்தது போல், இனி எந்தவொரு சம்பவம் நடந்தாலும் டாக்டர்கள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story