6 பேர் இடமாற்றத்தை கண்டித்து: போக்குவரத்து கழக பணிமனையை ஊழியர்கள் முற்றுகை - விருத்தாசலத்தில் பரபரப்பு


6 பேர் இடமாற்றத்தை கண்டித்து: போக்குவரத்து கழக பணிமனையை ஊழியர்கள் முற்றுகை - விருத்தாசலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் 6 பேர் இடமாற்றத்தை கண்டித்து போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் போக்கு வரத்து கழக பணிமனை 2-ல் சிங்காரவேல், சுரேஷ், முருகவேல் ஆகியோர் டிரைவர்களாகவும், ராஜதுரை, சிங்கதமிழன், நாகூர்மீரான் ஆகியோர் கண்டக்டர்களாகவும் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் சிங்காரவேல் உள்ளிட்ட 6 பேரையும் காட்டுமன்னார்கோவில் பணிமனைக்கு இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த 6 பேரும் நேற்று விருத்தாசலம் பணிமனைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம், ஏன் எங்களை இடமாற்றம் செய்தீர்கள் என கேட்டனர். அப்போது அதிகாரிகள், 6 பேரையும் இடமாற்றம் செய்தது உண்மைதான், இனி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினர்.

இதில் ஆத்திரமடைந்த சிங்காரவேல், ராஜதுரை உள்ளிட்ட 6 பேரும் போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், போக்குவரத்து கழகம் ஊழியர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே போக்குவரத்து கழக அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்று ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து கழக பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story