வாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது


வாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 11:47 PM GMT (Updated: 12 Dec 2018 11:47 PM GMT)

வாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் நேற்று மாலை விழுப்புரம்–திண்டிவனம் மெயின்ரோட்டில் ரங்கநாதபுரத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் ஆவணங்கள், லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பரிசோதிப்பதற்காக கேட்டனர்.

அப்போது அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த நீண்ட கத்தியை எடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவீந்திரனிடம் அந்த கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். அதனால் அவருடன் இருந்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசார் அவரை மடக்கிப்பிடித்து, வானூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் பெரம்பை ஊராட்சிக்குட்பட்ட வாழப்பட்டான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மீன் சேகர் (வயது 36) என்பது தெரிய வந்தது. மேலும் மீன் சேகர் ரவுடியாக செயல்பட்டு வந்ததும் அவர் மீது அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் மீன்சேகர் மீது கொலை வழக்கு, கொலை மிரட்டல், கத்தியைக்காட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து போலீசார் மீன் சேகரை கைது செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.


Next Story