குடிப்பவர்களுக்கு அனுமதி; குடியிருப்போருக்கு மறுப்பு- வனத்துறை கெடுபிடியால் கிராம மக்கள் பரிதவிப்பு
மேகமலை பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வனத்துறையின் கெடுபிடியால் மருத்துவமனை, வெளியூர்களுக்கு சென்று வருவதில் தொடர்ந்து பரிதவிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
தேனி,
சின்னமனூர் அருகே மேகமலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் பாதையில் தென்பழனி அருகில் வனத்துறை சோதனை சாவடி அமைந்து உள்ளது. இந்த வழியாக மலைக்கிராமங்களுக்கு செல்வதற்கு மாலை 6 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்றும், வன வளத்தின் பாதுகாப்பு கருதியும் அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்படுவதால் மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்களுக்கு சின்னமனூர் பகுதியில் திருமணம் நடத்துவதாக இருந்தால் அவசர அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்குள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. 5 அல்லது 10 நிமிடம் தாமதம் ஆனாலும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் திருமணத்துக்கு சென்றவர்கள், மருத்துவமனைகளுக்கு சென்றவர்கள் அதிகாலை வரை அங்கேயே சாலையில் தங்கி, மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. மலைப் பகுதியில் வாழும் மக்களின் அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட 6 மணிக்கு மேல் வனத்துறையினர் அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.
வனத்தின் பாதுகாப்பு கருதி மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படும் அதே நேரத்தில், பகல் நேரங்களில் மதுபான பாட்டில்களுடன் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் பலர் மலைப் பகுதிக்கு சென்று வருகின்றனர். மலைப் பாதையில் ஆங்காங்கே அமர்ந்து மதுபானம் அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசிச் செல்கின்றனர். இதுபோன்ற நபர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மது குடிப்பவர்கள் மலைப்பகுதியை நாசம் செய்வதை தடுக்க வனத்துறையினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளனர் என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
எனவே, இந்த மலைப்பாதையில் மதுபானத்துடன் செல்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு இந்த மலைப்பாதையில் பயணிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அவசர மருத்துவ சேவைக்காக ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம், தோட்ட தொழிலாளர்களும், கிராம மக்களும் பல்வேறு மனுக்கள் அளித்து வருகின்றனர். எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story