அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சார்பில் 20–ந் தேதி நடக்கிறது


அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சார்பில் 20–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 12 Dec 2018 11:55 PM GMT (Updated: 12 Dec 2018 11:55 PM GMT)

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தி கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20–ந் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் அருளானந்தம், செயலாளர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

புதுச்சேரியில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் அதைச்சார்ந்த சபைகளின் கீழ் புதுவை மற்றும் காரைக்காலில் கல்லூரிகள், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 45 கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இதில் 25 பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களாக உள்ளன.

இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 745 ஆசிரியர்கள் மற்றும் 138 ஊழியர்களுக்கு 95 சதவீதம் ஊதிய மானியம் வழங்கப்பட்டு வந்தது. 2006–ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 266 பதவிகள் உருவாக்கப்பட்டன. மேலும் பணியாற்றி ஓய்வு பெற்ற 200 ஆசிரியர்கள் பதவிகள் காலியிடங்களாக இருந்தன. அந்த பணியிடங்களிலும், புதிய பதவிகளிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களை கல்வித்துறை இதுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை. எனவே அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்து வேண்டும்.

பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாதமாதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். 22 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிர்வாக மானியத்தை வழங்கிட வேண்டும்.

கவர்னர் கிரண்பெடி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். மாணவர்களிடம் படிப்படியாக கட்டணத்தை உயர்த்தியும் 10 ஆண்டுகளில் மானியத்தை முழுவதும் நிறுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்பட்டால் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும். மானியம் முழுவதுமாக வழங்க ஆவண செய்ய வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுவதுமாக மானியம் வழங்க வலியுறுத்தி வருகிற 20–ந் தேதி தலைமை தபால் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story