பொய் கணக்குகளை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
ஆட்சியாளர்கள் பொய் கணக்குகளை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாங்கள் சபாநாயகரிடம் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை கொடுத்துள்ளோம்.
அதாவது கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பஞ்சாலை ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளத்திற்கான நிதி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு காலத்தோடு நிதி உதவியை வழங்காமல் காலம் தாழ்த்துவதால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு பிரேரணை கொடுத்துள்ளோம்.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க ரூ.300 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் கோப்புக்கு கேள்விகேட்டு கவர்னர் அனுமதி மறுத்துள்ளார். அப்படியானால் அரசு எதற்கு? சட்டமன்றம் எதற்கு?
புதுவை கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்கும் முன்பு 2014–15ல் மாநிலத்தின் வருவாய் ரூ.3 ஆயிரத்து 293 கோடியாகவும், 2015–16–ல் ரூ.3 ஆயிரத்து 398 கோடியாகவும், அவர் பொறுப்பேற்ற பின் 2016–17ல் 3 ஆயிரத்து 398 கோடியாகவும், 2017–18ல் ரூ.3 ஆயிரத்து 880 கோடியாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 முதல் 10 சதவீதம் வரை மாநிலத்தின் வருவாய் உயர்ந்து வருகிறது. மாநில வருவாய் உயர்ந்து வரும் நிலையில் திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போடவேண்டிய அவசியம் என்ன?
கவர்னர் கிரண்பெடி பொறுப்பேற்ற பின் கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.100 கோடி கொடுத்து 9 மாதமாகிறது. ஆனால் அதில் ஒரு காசுகூட செலவிடப்படவில்லை. மத்திய அரசு கொடுக்கும் பணத்தை செலவிடாமல் செய்வதில் குறியாக உள்ளனர். மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? உங்கள் திட்டம்தான் என்ன? புதுவையை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல போகிறீர்களா?
சமீபத்தில் நடந்த திட்ட மறுஆய்வு கூட்டத்தினை தொடர்ந்து 60 சதவீத நிதியை செலவு செய்துவிட்டதாக ஆட்சியாளர்கள் மார்தட்டி கொள்கிறார்கள். மொத்த பட்ஜெட் தொகையான ரூ.7 ஆயிரத்து 530 கோடியில் நடைமுறை செலவினம் ரூ.6 ஆயிரத்து 487 கோடி. மூலதன செலவு ரூ.1,073 கோடி. இந்த மூலதன செலவில் பெருமளவு தொகை செலவிடப்படாமல் உள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகத்தை கவர்னர் கிரண்பெடியும், முதல்–அமைச்சர் நாராயணசாமியும் காலில் போட்டு மிதிக்கிறார்கள். முதல்–அமைச்சரும், நிதித்துறை செயலாளரும் பொய் கணக்குகளை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இலவச அரிசி வழங்க பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரிசி வழங்கப்படவில்லை. கவர்னரும், முதல்–அமைச்சரும் இணைந்து நாடகம் நடத்தி புதுவை வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.