ரூ.50 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 2 பேர் கைது


ரூ.50 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 5:51 AM IST (Updated: 13 Dec 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

ரூ.50 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 2 பேரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.

மும்பை, 

மும்பையில் 2 பேர் மண்ணுளி பாம்பை விற்க முயற்சி செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த ஆசாமிகளின் செல்போன் எண்ணும் போலீசாருக்கு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை பொறிவைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினார்கள். அப்போது, எதிர்முனையில் பேசுவது போலீசார் என தெரியாமல், அவர்கள் மண்ணுளி பாம்புக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் தரவேண்டும் என பேரம் பேசினார்கள்.

இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக போலீசார் ரூ.50 லட்சமாக குறைத்து கேட்டனர்.

இதற்கு அந்த ஆசாமிகள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் மண்ணுளி பாம்புடன் தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வரும்படி கூறினார்கள். அதன்பேரில் அந்த ஆசாமிகள் அங்கு மண்ணுளி பாம்புடன் வந்தனர்.

அங்கு சாதாரண உடையில் இருந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் பாண்டுரங்(வயது40), சல்மான் (27) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவர் மீதும் போலீசார் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story