ரூ.1¼ கோடியில் மதகு கட்டும் பணி: காவேரிப்பாக்கம் ஏரியை கலெக்டர் பார்வையிட்டார் 200 ஏக்கர் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
காவேரிப்பாக்கம் ஏரியில் ரூ.1¼ கோடியில் புதிய மதகு அமைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து கலெக்டர் ராமன் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரியை ஆக்கிரமித்து 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி காவேரிப்பாக்கம் ஏரியாகும். இந்த ஏரி 3 ஆயிரத்து 968 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட உயரம் 30.65 அடியாகும். இந்த ஏரியில் மூல மதகு, சிங்க மதகு, கிழவன் மதகு உள்பட 10 மதகுகள் உள்ளன. 10 மதகுகளின் மூலம் திறந்து விடப்படும் தண்ணீரால் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம், அய்யன்பேட்டைசேரி, ஈராளச்சேரி, மாகாளிப்பட்டு, துரைப்பெரும்பாக்கம், ஆலப்பாக்கம், அத்திப்பட்டு, பன்னீயூர், கீழ்வீராணம், கடப்பேரி, சிறுகரும்பூர், புதுப்பட்டு உள்பட 14 கிராமங்களில் உள்ள 6 ஆயிரத்து 278 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி மூலம் 55 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் காவேரிப்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஏரியில் உள்ள பழைய மூல மதகை அகற்றிவிட்டு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய மதகு கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். காவேரிப்பாக்கம் ஏரியில் சுமார் 200 ஏக்கரை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டு உள்ள வாழை மற்றும் காய்கறி பயிர்களையும் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சிறுகரும்பூர் ஏரியை பார்வையிட்ட கலெக்டர் ராமன் அப்பகுதியில் இருந்த சீமகருவேல மரங்களை அகற்றிய அதிகாரிகளை பாராட்டினார்.
இதேபோல மற்ற ஏரிகளிலும் உள்ள சீமகருவேல மரங்களை அகற்றுமாறு கூறினார். தொடர்ந்து பனப்பாக்கம் ஏரி, பொய்கை நெல்லூர் ஏரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் அன்பரசன், உதவி செயற் பொறியாளர்கள் ரவி, சந்திரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story