கைதிக்கு செல்போன் வாங்கிக்கொடுத்த வேலூர் மத்திய ஜெயில் காவலர் பணியிடை நீக்கம் சிறைத்துறை டி.ஐ.ஜி. நடவடிக்கை
வேலூர் மத்திய ஜெயிலில் கைதிக்கு செல்போன் வாங்கிக்கொடுத்த 2-ம் நிலை காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் ஜெயிலில் காவலர்கள் சோதனை செய்தபோது திருவண்ணாமலையை சேர்ந்த தண்டனை கைதி ஒருவரிடம் இருந்து கஞ்சாவும், சில கைதிகளிடம் இருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு சோதனைகளுக்கு பின்னரும் ஜெயிலில் கைதிகள் கஞ்சா, செல்போன் பயன்படுத்தியது சிறைத்துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஜெயில் உயர் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினர். அதில், கைதிகளுக்கு ஜெயில் காவலர்கள் கஞ்சா, செல்போன் வினியோகம் செய்தது தெரியவந்தது. ஜெயிலில் பணிபுரியும் முதன்மை தலைமை காவலர் செல்வின் தேவதாஸ், தண்டனை கைதிக்கு கஞ்சா வினியோகம் செய்ததும், அதற்காக அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வின்தேவதாஸ் கடந்த மாதம் 17-ந் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இதுபோன்ற செயலில் வேறு காவலர்கள் ஈடுபட்டு வருகிறார்களா? என உயர் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் வாணியம்பாடியை சேர்ந்த கார்வீன் மோசஸ் (வயது 45) என்பவரை ஜெயிலில் பணிபுரியும் 2-ம் நிலை காவலர் கணபதி அடிக்கடி சந்தித்து பேசுவது தெரியவந்தது. அதனால் சந்தேகம் அடைந்த சிறைத்துறை அதிகாரிகள் கணபதியை கண்காணித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கார்வீன் மோசஸிடம் இருந்து செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதில், இருந்த செல்போன் எண்ணை ஜெயில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், கார்வீன் மோசஸ், அவரது குடும்பத்தினர் மற்றும் 2-ம் நிலை காவலர் கணபதியிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஜெயில் கண்காணிப்பாளர் ஆண்டாள், கணபதியிடம் விசாரணை நடத்தினார். அதில், ஜெயிலில் கார்வீன் மோசசுக்கு தேவையான உதவிகளை கணபதி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் ஆண்டாள், கணபதியை பணியிடை நீக்கம் செய்ய சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கணபதியை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர் கணபதி கடந்த 2017-ம் ஆண்டுதான் பணியில் சேர்ந்தார். 6 மாத பயிற்சி முடித்துவிட்டு கடந்த ஜூலை மாதம் முதல் வேலூர் மத்திய ஜெயிலில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். சாராய வியாபாரி கார்வீன் மோசசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கணபதி செய்து வந்துள்ளார்.
குறிப்பாக கார்வீன் மோசஸ் குடும்பத்தினரிடம் பேச செல்போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்காக கணபதி கடந்த வாரம் வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று புதிய செல்போன் மற்றும் பணம் வாங்கி வந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மத்திய ஜெயிலில் காவலரே, கைதிக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story