காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள துரைசாமி கொட்டாயை சேர்ந்தவர் குட்டியப்பன். இவருடைட மகன் விஜி(வயது19). இவர் தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்கு முன்பு விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த மின்மோட்டார் அறைக்கு சென்று மோட்டாரை விஜி இயக்கி உள்ளார். ஆனால் மின்மோட்டார் இயங்கவில்லை. இதனால் விஜி மின்மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விஜியை திடீரென்று மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விஜியை காணாததால் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதுகுறித்து கிராம கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இதுகுறித்து பொம்மஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story