தர்மபுரி பஸ் நிலையத்தில் விதிமுறையை மீறி நிறுத்தப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார் நடவடிக்கை


தர்மபுரி பஸ் நிலையத்தில் விதிமுறையை மீறி நிறுத்தப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2018 4:00 AM IST (Updated: 13 Dec 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார் அந்த பகுதியில் விதிமுறையை மீறி நிறுத்தப்பட்டிருந்த 60 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி நகரின் புறநகர் மற்றும் டவுன் பஸ்நிலையங்கள் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், பஸ்போக்குவரத்துக்கும் இடையூறாக இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பஸ்களை நிறுத்தும் இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதன்காரணமாக பஸ் நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், நுழைவதற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மேற்பார்வையில் போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது போக்குவரத்திற்கு இடையூறாகவும், பயணிகள் எளிதாக சென்றுவர தடையாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள், ஸ்கூட்டர்கள் என 60 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, நிழற்குடை ஆகியவற்றை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளையும் அகற்றினார்கள்.

பஸ் நிலையத்தில் பயணிகளுக்கும் பஸ்களை நிறுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்து கடை வைப்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது போலீசார் எச்சரித்தனர். இத்தகைய விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.


Next Story