மத போதகர் கொலை வழக்கு: தென்காசி கோர்ட்டில் அண்ணன் மகன் சரண்
கயத்தாறு அருகே கிறிஸ்தவ மத போதகர் கொலை வழக்கில் தேடப்பட்ட அவரது அண்ணன் மகன் நேற்று தென்காசி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தென்காசி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இவருடைய அண்ணன் பால் தங்கசாமியின் மகன் ராஜா (32), ஆட்டோ டிரைவர். இவர் ராஜாபுதுக்குடியில் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும், ராஜா கோயில்பிள்ளைக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா கோயில்பிள்ளை, ராஜாபுதுக்குடியில் உள்ள தனது நிலங்களை பார்வையிட வந்தார். அப்போது அவருக்கும், அவருடைய அண்ணன் மகன் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா அரிவாளால் தன்னுடைய சித்தப்பா ராஜா கோயில்பிள்ளையை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜா, தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜாவை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story