திரைப்பட தணிக்கை துறையில் “மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ, மத்திய அரசுக்கு வலியுறுத்தல்


திரைப்பட தணிக்கை துறையில் “மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ, மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:30 PM GMT (Updated: 13 Dec 2018 5:50 PM GMT)

திரைப்பட தணிக்கை துறையில் மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்று கட்சியில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு செந்தில் பாலாஜி உதாரணமாக உள்ளார். அவர், ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றார். பின்னர் அவர் அ.தி.மு.க.வில் இருந்து, அ.ம.மு.க.வுக்கு சென்றார். தற்போது அவர் மீண்டும் தி.மு.க.வுக்கு செல்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்களும் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். சுந்தரராஜ் தி.மு.க.வில் இருந்தும், உமா மகேசுவரி தே.மு.தி.க.வில் இருந்தும் அ.தி.மு.க.வுக்கு வந்தவர்கள். தொடக்கத்தில் இருந்தே ஒரே கட்சியில் இருந்தவர்கள் எந்த கட்சிக்கும் மாற மாட்டார்கள். எனவே, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளேன்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். காவிரி பாயும் 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு உறுப்பினர் வீதம் நியமித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல், காவிரியில் மேகதாது உள்பட எங்கேயும் அணை கட்ட முடியாது என்ற விதி உள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும்.

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கியபோது, அவரை கொல்ல சதி நடந்தது. அவருடைய மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா அ.தி.மு.க.வை தலைமை தாங்கி வழிநடத்தியபோது, அவரையும் புதுச்சேரியில் இருந்து வந்தபோது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. எனவே, அரசியலில் சதி இருந்தாலும், அதை முறியடித்து வெற்றி பெற்று, இயக்கத்தை வளர்க்கும் கடமை தலைவர்களுக்கு உள்ளது.

தணிக்கை துறையில் பிரதிநிதித்துவம்

கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக வருவாய் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். அவர்களை அழைத்து பேசும்போது சுமுக தீர்வு காணப்படும்.மத்திய அரசின் திரைப்பட தணிக்கை துறையில் அந்தந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் திரைப்படத்தை தணிக்கை செய்யும்போதே, மாநிலத்தில் தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் இருந்தால் அதனை தணிக்கை செய்ய முடியும். இதனால் மறுதணிக்கை செய்யும் நிலை ஏற்படாது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவோம்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்களின் உரிமையில் தலையிட முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story