தேவேந்திரகுல வேளாளர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
தூத்துக்குடி,
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து பட்டியல் இனத்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டியல் இன மக்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும், அவர்களை பட்டியல் பிரிவில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த 4 நாட்களாக அனைத்து மாவட்ட கலெக்டரையும் நேரில் சந்தித்து கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்து வருகிறோம். இன்று 200 கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கலெக்டரிடம் கொடுத்து உள்ளோம். இந்த சமூகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எக்காரணம் கொண்டும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது பயன்படுத்தக்கூடாது என்று மாநாட்டிலேயே அறிவித்து உள்ளோம். இந்த கோரிக்கையை நிறைவேற்ற பணம் தேவை இல்லை. ஒரு துளி மையிலே சமூக புரட்சியை ஏற்படுத்தி விடலாம். டிசம்பர் மாதத்துக்குள் இதற்கு மாநில அரசு ஆணை பிறப்பிக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று நம்புகிறோம். போராடித்தான் ஆகவேண்டும் என்றால், அதற்கும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story