பாளையங்கோட்டை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம்; 5 பேர் கைது பெங்களூருவை சேர்ந்த 3 பெண்கள் மீட்பு
பாளையங்கோட்டை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெங்களூருவை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் பெங்களூரு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் உத்தரவின் பேரில், பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு பங்களாவுக்கு அடிக்கடி கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் வந்து சென்றன. உடனே போலீசார் அந்த பங்களாவில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. ரெட்டியார்பட்டியை சேர்ந்த மரியசெல்வம் (வயது 41) என்ற பெண்ணும், மேலும் சிலரும் சேர்ந்து இந்த தொழிலை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மரியசெல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த வண்ணார்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (28), கூடங்குளத்தை சேர்ந்த சிவகுமார் (37), சாந்திநகரை சேர்ந்த ரவிகுமார் (49), மூலைக்கரைப்பட்டி சுப்பிரமணியன் (35) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் பங்களாவில் இருந்த பெங்களூருவை சேர்ந்த 3 பெண்களையும் போலீசார் மீட்டு, மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சொகுசு பங்களாவில் பெங்களூரு பெண்களை வைத்து விபசாரம் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story