பெட்டிக்கடையில் விற்கப்பட்ட மதுபாட்டில்களை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல் - கொடைக்கானல் அருகே பரபரப்பு


பெட்டிக்கடையில் விற்கப்பட்ட மதுபாட்டில்களை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல் - கொடைக்கானல் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே பெட்டிக்கடையில் விற்ற மதுபாட்டில்களை கைப்பற்றி சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் பெருமாள்மலை கிராமம் உள்ளது. இங்கு அனுமதியின்றி பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடைசெய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெட்டிக்கடையினை திறந்து அதில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின்னர் அந்த மதுபாட்டில்களை பழனி பிரிவு சாலையில் கீழே கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே அப்பகுதியில் மது விற்பனை செய்ததாக அடுக்கம் அருகேயுள்ள சாமக்காட்டை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 104 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Next Story