புயல் பாதிப்பில் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
‘பெய்தா’ புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி,
கடந்த மாதம் ‘கஜா’ புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே அதிவேகத்துடன் கரையை கடந்த காரணத்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாய பயிர்கள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.
இந்தநிலையில் நாளை (சனிக் கிழமை) ‘பெய்தா’ எனும் புயல் தமிழகத்தின் வடக்கு கடற்கரையோர மாவட்டங்களான திருவள்ளூர், நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளது. இதன் காரணமாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பல்லாண்டு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தென்னை விவசாயத்தில் 7 முதல் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட அதிக மகசூல் தரும் தென்னை மரங்கள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மரங்களில் உள்ள தேங்காய், இளநீர் மற்றும் அதிக பாரம் உள்ள தென்னை மட்டைகளை அகற்றிட வேண்டும். இதன் மூலம் மரங்களில் உள்ள பாரம் குறைந்து புயலினை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
தென்னந்தோப்புகளில் நீர் பாய்ச்சுவதை நிறுத்திட வேண்டும். இதனால், வேர் பகுதி நன்றாக இறுகி காற்றினால் சாயாமல் இருக்கும் வாய்ப்பு ஏற்படும். மா, பலா, முந்திரி மற்றும் பிற தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள தோட்டங்களில் புயல் காற்று மரங்களுக்கு இடையே புகுந்து செல்லும் வகையில் மரங்களின் பக்கவாட்டு கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்தால் மரம் வேரோடு சாயும் நிலையை தவிர்க்கலாம்.
உரமிடுதல் போன்ற பணிகளை புயல் கடந்த பின்பு மேற்கொள்வது சிறந்தது. வாழைத் தோப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சுற்றிலும் வாய்க் கால் எடுத்துவிட வேண்டும்.
வேம்பு, பூவரசு, புங்கன் ஆகிய மரங்களின் கிளைகளை வெட்டி தளைகளை குறைப்பதன் மூலம் புயலில் இருந்து மரங்களை பாதுகாக்கலாம். வெட்டிய இலைகளை பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் தண்ணீரை வடித்து வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு புயலின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story