நீர்த்தேக்க தொட்டிக்குள் இறந்து கிடந்த சேவல்: புழுக்கள் கலந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி-மயக்கம்
மயிலாடும்பாறை அருகே நீர்த்தேக்க தொட்டிக்குள் சேவல் இறந்து கிடந்தது. இதனால் உருவான புழுக்கள் கலந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் கருப்பையாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கிற பொதுமக்களுக்கு, மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
மூலவைகை ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிற தண்ணீர், கருப்பையாபுரம் கிராமத்தில் உள்ள 48 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கருப்பையாபுரம், உப்புத்துறை, ஆட்டுப்பாறை, பின்னத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கருப்பையாபுரம் கிராமத்தில் தெருக்குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்ட தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் சோதனை செய்தனர்.
அப்போது, தொட்டிக்குள் இறந்து கிடந்த ஒரு சேவல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அதன் உடல் முழுவதும் புழுக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளில் பிடித்து வைத்திருந்த குடிநீரை சாக்கடை கால்வாயில் ஊற்றினர். இதுகுறித்து கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. புழுக்களுடன் கிடந்த சேவலின் உடல் அகற்றப்பட்டு தொட்டியில் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. ஆனால் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. இதனால் குடிநீரில் இன்னும் புழுக்கள் மிதக்கின்றன.
எனவே தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை முழுமையாக அகற்றிவிட்டு, முறையாக சுத்தம் செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படுகிற குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டாம் என்று உப்புத்துறை, ஆட்டுப்பாறை உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story