சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி: அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - திட்டக்குடி அருகே பரபரப்பு


சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி: அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - திட்டக்குடி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 10:00 PM GMT (Updated: 13 Dec 2018 6:16 PM GMT)

சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த கோழியூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக பேரூராட்சி சார்பில் அதே பகுதியில் ஆழ்துளை அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பேரூராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக தெரிகிறது. சுகாதாரமான குடிநீரை பருகுவதனால் அப்பகுதி மக்களுக்கு பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் கோழியூர்-கோடங்குடி சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே காலி குடங்களுடன் திரண்டனர். அப்போது கோடங்குடியில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சிறைபிடித்து வைத்திருந்த அரசு பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story