தேன்கனிக்கோட்டை அருகே, சாலையை கடந்த யானைகளை கற்களை வீசி தாக்கிய இளைஞர்கள் விலங்கின ஆர்வலர்கள் அதிர்ச்சி
தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்த யானைகளை கற்களை வீசி இளைஞர்கள் தாக்கிய சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்துள்ளன. இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதியில் பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய 50-க்கும் மேற்பட்ட யானைகள் அருகில் உள்ள சாப்ரானப்பள்ளி, லக்கசந்திரம், மாரசந்திரம் பகுதிகளுக்கு சென்றன. பின்னர் அவை மாரசந்திரம் அருகில் சாலையை நேற்று கடந்தன. அந்த நேரம் அங்கு கூடி இருந்த இளைஞர்கள் யானைகளின் மீது கற்களை வீசி தாக்கினார்கள்.
இதனால் யானைகள் பிளிறியபடி ஓடின. தற்போது அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி அருகே உள்ளன. யானைகளின் மீது இளைஞர்கள் கற்களை தூக்கி வீசி தாக்கியதை கண்டு விலங்கின ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விலங்கின ஆர்வலர் கள் கூறுகையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வருவது வழக்கம். இந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டுவார்கள். ஆனால் சமீப காலமாக யானைகளை பொதுமக்களே விரட்டுகிறோம் என்ற பெயரில் கற்களை யானைகளின் மீது தூக்கி வீசி அவற்றை துன்புறுத்துகிறார்கள்.
யானைகளை துன்புறுத்துவதின் காரணமாக அவை ஆக்ரோஷத்தில் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் யானை தாக்கி 2 பேர் பலியாகி உள்ளார்கள். யானைகளை பொதுமக்கள் விரட்டிட வனத்துறை அனுமதிக்க கூடாது என்றனர்.
உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் இருந்த 65 யானைகள் நேற்று முன்தினம் இரவு அம்லபட்டி, பேரண்டப்பள்ளி, ராமாபுரம், போடூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை நாசம் செய்தன. போடூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அவை நெல், ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story