சிறுபான்மையின பள்ளிகளுக்கு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி கலெக்டர் தகவல்


சிறுபான்மையின பள்ளிகளுக்கு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையின பள்ளிகளுக்கு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி தேவைப்படும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் உதவி பெறும், உதவி பெறாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய சிறுபான்மையின பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கான வகுப்பறை, அறிவியல் கூடம், கழிவறை, குடிநீர், கணினி அறை, நூலக அறை, மகளிர் விடுதி உள்ளிட்டவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவீதம் வரையிலும், அல்லது ரூ. 50 லட்சத்திற்கு மிகாமல் மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை www.mh-rd.gov.in/id-mi என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவின் மூலம் தகுதியான விண்ணப்பங்கள் மாநில அளவிலான குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். பள்ளி கல்வி நிறுவனங்கள் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, முதன்மை கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள், தங்களின் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவையிருப்பின், மேற்படி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story