வீடு, டாஸ்மாக் கடையில் திருடியவருக்கு 8 ஆண்டுகள் சிறை - கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு
வீடு, டாஸ்மாக் கடையில் திருடியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கூடலூர்,
கூடலூரை அடுத்த மேல் கூடலூரை சேர்ந்தவர் ஜோசப் அலேசியஸ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்ட மர்ம நபர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று 2 பவுன் நகை, எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோல் தேவர்சோலை அருகே பாடந்துறை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையிலும் திருட்டு நடந்தது. இது தொடர்பாக தேவர்சோலை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வீடு மற்றும் டாஸ்மாக் மதுக்கடையில் திருடியது தேவன் எஸ்டேட் பகுதியை சேர்ந்த மோகன் என்ற பிளேடு மோகன் (வயது 41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜோசப் அலேசியஸ் மற்றும் பாடந்துறை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு கூடலூர் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வீட்டில் திருடியதற்கு 4 ஆண்டுகளும், டாஸ்மாக் கடையில் திருடியதற்கு 4 ஆண்டுகளும் என பிளேடு மோகனுக்கு மொத்தம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அவருக்கு 400 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜரானார்.
Related Tags :
Next Story