ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் முதல்– அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் முதல்– அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கத்தை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.1 கோடியே 50 லட்சமும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.1 கோடியே 50 லட்சமும் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில், தரைதளம் மரத்தினால் அமைக்கப்பட்ட இந்த உள்விளையாட்டு அரங்கம் 52 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும் கொண்டது. ஆடுகளம் 40 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டது. கைப்பந்து, கூடைப்பந்து, கையுந்துப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு இதில் பயிற்சி பெறலாம். அதேபோல தடகளத்தில் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக 1.66 மீட்டர் அகலத்தில் சின்தடிக் ஓடுதள பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்தடிக் ஓடுதள பாதை தமிழகத்திலேயே பெரம்பலூரில் முதன் முறையாக உள் விளையாட்டரங்கத்திலேயே நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர உள்விளையாட்டு அரங்கில் டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவீன உள்விளையாட்டு அரங்கை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தொடர்ந்து பெரம்பலூரில் உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்து விளக்கேற்றி, விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுனர் கோகிலா, கைப்பந்து பயிற்றுனர் வாசுதேவன், டேக்வோண்டோ தற்காப்புக்கலை பயிற்றுனர் தர்மராஜன் மற்றும் விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story