கஜா புயலால் வீடுகள் பாதிப்புக்கு நிவாரணமாக 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி செலுத்தப்பட்டுள்ளது


கஜா புயலால் வீடுகள் பாதிப்புக்கு நிவாரணமாக 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி செலுத்தப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 13 Dec 2018 11:00 PM GMT (Updated: 13 Dec 2018 7:51 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி நிவாரணம் செலுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயல் மீட்பு பணிகள் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, கலெக்டர் கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர மீட்புப் பணியின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகு விரைவாக திரும்பி உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்- அமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

கஜா புயலால் சேதமடைந்த வீடுகள், விவசாய நிலங்கள், கால்நடைகள் என பாதிப்படைந்த அனைத்து தரப்பிற்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுகள் பாதிக்கப்பட்ட சுமார் 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்குகளில் இதுவரை ரூ.32 கோடி நிவாரணம் செலுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியதில் 7 லட்சத்து 90 ஆயிரம் தென்னை மரங்கள் உள்பட பலா, மா, தேக்கு, சவுக்கு மற்றும் இதர தோட்டங்களில் உள்ள பல லட்சம் எண்ணிக்கையிலான மரங்கள் சேதமடைந்து உள்ளன. இவ்வாறு சாய்ந்து உள்ள மரங்களுக்கு தமிழக அரசால் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் விழுந்த மரங்களுக்கு பதிலாக 2 மடங்கு மரக்கன்றுகள் புதிதாக நட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டுநிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். விவசாய மின் இணைப்புகள் வழங்கும்போது, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மின் இணைப்புகள் வழங்குவது சவாலாக உள்ளது. முழுமையாக மின் இணைப்பு வழங்க சில நாட்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story