திருவொற்றியூர் அருகே லாரி மோதி முதியவர் பலி; குழந்தை படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்


திருவொற்றியூர் அருகே லாரி மோதி முதியவர் பலி; குழந்தை படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:45 PM GMT (Updated: 13 Dec 2018 7:56 PM GMT)

திருவொற்றியூர் அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். குழந்தை படுகாயம் அடைந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் லட்சுமிக்கு திருமணமாகி 2½ வயதில் நேகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை, திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வருகிறது.

நேற்று காலை தனது பேத்தியை பள்ளியில் கொண்டு சென்று விடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார். திருவொற்றியூர் அருகே எண்ணூர் விரைவு சாலையில் சக்திநகர் பகுதியில் சென்றபோது, எதிரே திருவொற்றியூரில் இருந்து மாதவரம் நோக்கி வேகமாக வந்த கன்டெய்னர் லாரி திடீரென தறிகெட்டு ஓடி கிருஷ்ணமூர்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

சில அடி தூரத்துக்கு மோட்டார்சைக்கிளை இழுத்துச்சென்ற கன்டெய்னர் லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் கிருஷ்ணமூர்த்தி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த குழந்தை நேகாஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து நடந்ததும் அங்கு திரண்டு வந்த அந்த பகுதி பொது மக்கள், விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து வைத்துக்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் போலீசாரிடம் டிரைவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் டிரைவரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ்(40) என்பது தெரிந்தது.

அவர், குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. கைதான டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story