பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை


பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 14 Dec 2018 5:00 AM IST (Updated: 14 Dec 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கோபி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகள் சாவித்திரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியது.

தற்போது இவர்களுக்கு புகழ்யா (2) என்ற மகள் உள்ளாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரியின் பெற்றோர் வீட்டில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. இதில் சாவித்திரியும் கலந்துகொண்டார். பின்னர் அன்று முதல் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு ஒருவித அச்சத்திலும் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அவர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சாவித்திரி வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு கொண்டார். நேற்று காலை சாவித்திரி தூக்கில் தொங்குவதை கவனித்த சுரேஷ்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாவித்திரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சாவித்திரிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. அசோகன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story